மதுராந்தகம் அருகே குடும்ப தகராறில் மனைவியை கத்தியால் குத்தி தெருவில் போட்டு காரை ஏற்றி கணவர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் கருங்குழியில் கோகுல் குமார் மற்றும் கீர்த்தனா தம்பதியர் வசித்து வருகின்றனர். அதில் கோகுல் குமார் தனியார் மருத்துவமனையில் மருத்துவராகவும், கீர்த்தனா தனியார் நிறுவன மேலாளராகவும் பணியாற்றி வருகிறார்கள். இவர்களுக்கு மூன்று வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது. ஆனால் குழந்தை இல்லாத காரணத்தால் இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாகவும் கோகுல் குமார் பணிக்குச் செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார்.
அதனால் விவாகரத்து கேட்டு மதுராந்தகம் நீதிமன்றத்தில் ஆறு மாதங்களுக்கு முன்னர் இருவரும் வழக்கு தொடர்ந்தார்கள். இந்நிலையில் அப்பகுதியில் வசிக்கும் மாமனார் முஹாரி நேற்று மதியம் வீட்டுக்குச் சென்ற கோகுல்குமார் மற்றும் கீர்த்தனாவிடம் பேசியுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி உள்ளது. அதனால் ஆத்திரமடைந்த கோகுல் குமார், வீட்டில் இருந்த கத்தியை எடுத்து வந்து கீர்த்தனாவின் கழுத்தில் குத்தினார். தடுக்க வந்த மாமனாரையும் கண்மூடித்தனமாக குத்தியுள்ளார்.
அதன்பிறகு மனைவியின் முடியைப் பிடித்து வெளியே இழுத்து வந்து சாலையில் கிடத்தினார். அங்கு நிறுத்தி வைத்திருந்த காரை எடுத்து கீர்த்தனாவின் மீது ஏற்றி கொன்று விட்டு தப்பி ஓடிவிட்டார். இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கீர்த்தனாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து நேற்று மாலை 5 மணிக்கு கோகுல் குமார் சென்ற கார் சென்னை,-திருச்சி நெடுஞ்சாலையில் விபத்துக்குள்ளானது. அதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.