மாமனாரை பழிவாங்கும் நோக்கத்தோடு ஒருவர் தனது மனைவியின் தம்பியை கடத்தி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பாலாஜி கார்டன் 7 வது தெருவில் மாரியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஒரு மகளும், ஒரு மகன் உள்ளனர். இவர் அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் பள்ளிக்கூடத்திற்கு புகுந்து வகுப்பறையில் இருந்த கணேஷை அடித்து உதைத்து ஐந்து பேர் கொண்ட மர்ம கும்பல் காரில் கடத்தி சென்றுவிட்டனர். அப்போது சக மாணவர்கள் கடத்தல் கும்பலில் ஒருவரான சந்தோஷ் குமார் என்பவரை பிடித்து செங்குன்றம் காவல் நிலையத்தில் ஒப்படைத்து விட்டனர்.
அதன் பின் அவரிடம் நடத்திய விசாரணையில் மாரியப்பனின் மகள் ஜனனிக்கும், புதுக்கோட்டை மாவட்டத்தில் வசித்து வரும் பூபதி என்பவருக்கும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றதாகவும், கருத்து வேறுபாடு காரணமாக பூபதியிடம் சண்டை போட்டுவிட்டு ஜனனி தனது தாய் வீட்டிற்கு வந்துவிட்டதும் போலீசாருக்கு தெரிய வந்துள்ளது. இதனால் தனது மாமனார் மாரியப்பனை பழிவாங்கும் எண்ணத்தில் கோபமடைந்த பூபதி தனது நண்பர்களுடன் தனது மைத்துனரான கணேஷை புதுக்கோட்டைக்கு காரில் கடத்தி சென்றது தெரியவந்துள்ளது.
இதனை தொடர்ந்து சுங்க சாவடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் அந்த காரை மடக்கி பிடித்து கணேஷை பாதுகாப்பாக மீட்டுள்ளனர். அதன்பின் மாணவரை கடத்திய குற்றத்திற்காக பூபதி, ஆதித்திய நடராஜ், சக்திவேல், மணிகண்டன், ஸ்ரீனிவாசன் போன்றோர் மீது ஆள் கடத்தல் வழக்கு பதிவு செய்து செங்குன்றம் போலீசார் அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.