மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்தில் பங்கேற்ற இளம்பெண் ராணுவத்தினரால் சுடப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
மியான்மரில் ஆங் சான் சூகியின் ஜனநாயக ஆட்சி கவிழ்க்கப்பட்டு ராணுவம் அந்நாட்டின் ஆட்சியை கைப்பற்றியது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கடந்த இரண்டு வாரங்களாக மியான்மரில் பொதுமக்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேபிடாவ் என்ற பகுதியில் நடத்தப்பட்ட போராட்டம் திடீரென வன்முறையாக மாறியது. அப்போது பொதுமக்கள் மீது ராணுவத்தினர் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியதில் பல பேர் படுகாயமடைந்தனர்.
இந்த கொடூர தாக்குதலில் 20 வயதான மியா த்வதே த்வதே கைங் என்ற இளம்பெண் ராணுவத்தினரால் தலையில் சுடப்பட்டு படுகாயமடைந்துள்ளார். பின்னர் அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி மியா த்வதே த்வதே கைங் உயிரிழந்துள்ளதாக மருத்துவமனையின் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
ராணுவ ஆட்சிக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்தில் ஏற்பட்ட முதல் மரணம் இது. அவர் உயிரிழந்த செய்தியை கேட்டு நாட்டில் உள்ள அனைவரும் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மியா த்வதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் கூட அவருக்கு சிகிச்சை அளிக்க கூடாது என்று மருத்துவர்களுக்கு கடும் அழுத்தம் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.