இன்று நடக்க இருந்த தலைமையாசிரியர் பதவி உயர்வு கலந்தாய்விற்கு உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
தமிழக அரசு பள்ளியில் காலியாக உள்ள முதுநிலை ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கான பணியிடங்களை நிரப்ப பள்ளி கல்வித்துறைக்கு அரசு அனுமதி வழங்கி இருந்தது. இந்நிலையில் முதுநிலை ஆசிரியர்கள், உரிய கல்வித் தகுதி உடைய பள்ளி, கல்வி அலுவலர்களுக்கும், பட்டதாரி ஆசிரியர்களுக்கும் பதவி உயர்வு வழங்கப்பட்டது. இதில் 500 பேருக்கு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டு இன்று கலந்தாய்வு நடைபெற இருந்தது.
இந்நிலையில் தலைமையாசிரியர் ஜேக்கப் தொடர்ந்த வழக்கில் இன்று நடக்க இருந்த தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு தடை விதித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்தாமல் பதவி உயர்வுக்கு மட்டும் கலந்தாய்வு நடத்துவதாகவும், பதவி உயர்வு கலந்தாய்வு நடந்தால் பலருக்கு உரிய இடம் கிடைக்காத நிலை ஏற்படும் என்றும் தெரிவித்திருந்தார். இந்த வழக்கில் பள்ளிக் கல்வித்துறை செயலாளர் பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கை பிப்ரவரி 24ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.