தன்னுடன் வாழ மறுத்த கணவரை காதல் மனைவி தர்ம அடி கொடுத்து அழைத்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பகுதியில் எம்.பி.ஏ பட்டதாரி ஒருவர் வசித்து வருகிறார். அவர் பெங்களூருவில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த போது அவருக்கும் அவருடன் வேலை பார்க்கும் காரைக்குடி பகுதியை சேர்ந்த இளம்பெண்ணிற்கும் ஏற்பட்ட நட்பு நாளடைவில் காதலாக மாறியுள்ளது. அதன்பின் இருவரும் சேர்ந்து பல இடங்களுக்கு ஒன்றாக சுற்றி உள்ளனர். இந்நிலையில் இளம்பெண் கர்ப்பம் ஆனது தெரிய வந்தது. அதனை அவமானமாக கருதிய காதல் கணவன் கருவை கலைக்குமாறு இளம்பெண்ணிடம் கூறியுள்ளார். அதையடுத்து இளம் பெண் தனது கர்ப்பத்தை கலைத்து உள்ளார்.
பிறகு இருவருக்கும் திருமணம் செய்து வைக்குமாறு இளம்பெண் தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். திருமணம் செய்தால் தனது காதலனை மட்டும் தான் திருமணம் செய்வேன் என்றும் தன் வீட்டில் கூறியுள்ளார். இதையடுத்து சில மாதங்களுக்கு முன்பு அவர்கள் இருவருக்கும் பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர். பின் இருவரும் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவிலில் ஒன்றாக வசித்து வந்துள்ளனர். இதனை அடுத்து இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் வேதனை அடைந்த இளம் பெண் தனது தந்தை வீட்டிற்கு சென்றுள்ளார். சிறிது நாட்கள் கழித்து மீண்டும் கணவன் வீட்டிற்குச் சென்ற இளம்பெண்ணை கணவனின் பெற்றோர்கள் வீட்டில் உள்ள ஒரு அறையில் வைத்து பூட்டி உள்ளனர். அதிலிருந்து தப்பி சென்ற இளம்பெண் கோட்டார் பகுதியில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளார். இதை அறிந்த இளம்பெண்ணின் கணவரும் காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார். அங்கு இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரம் அடைந்த காவல்துறையினர் இருவரையும் கண்டித்து வெளியே செல்லுமாறு கூறினர். அதன்பின் இளம்பெண் தன் காதல் கணவனை தன்னுடன் வருமாறு கேட்டுள்ளார். அதற்கு மறுப்பு தெரிவித்த கணவனை நடுரோட்டில் வைத்து தர்ம அடி கொடுத்துள்ளார். அடித்ததில் அவருக்கு ரத்தம் வர தொடங்கியுள்ளது. அதைகண்ட இளம்பெண் அவரை மருத்துவமனைக்கு தன்னுடன் வருமாறு கேட்டுள்ளார். இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் கோட்டார் பகுதியில் ஒரு மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பின் இருவரும் மோட்டார் சைக்கிளில் ஒன்றாக மருத்துவமனைக்கு சென்றனர்.