மனைவியை கொடூரமாக கொலை செய்து விட்டு தப்பி சென்ற டாக்டர் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் பகுதியில் முரஹரி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கீர்த்தனா என்ற ஒரு மகள் உள்ளார். அவர் தனியார் கல்லூரி ஒன்றில் மேல்மருவத்தூரில் பணியாற்றி வந்தார். கீர்த்தனாவிற்கு சென்ற 3 வருடங்களுக்கு முன்பு கோவையைச் சேர்ந்த கோகுல்குமார் என்ற டாக்டருடன் திருமணம் நடைபெற்றது. அதன்பின் அவர்கள் இருவருக்கும் குழந்தை இல்லை.
மேலும் இருவருக்கும் இடையே ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக கீர்த்தனா தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் கோகுல் குமார் மதுராந்தகத்தில் உள்ள கீர்த்தனாவின் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு அவர் கீர்த்தனாவின் கழுத்தை கத்தியால் அறுத்ததோடு, காரை ஏற்றியும் கொலை செய்துள்ளார். இதனை தடுக்க முயன்ற கீர்த்தனாவின் தந்தை முரஹரி மற்றும் தாய் குமாரி ஆகிய இருவரையும் கத்தியால் குத்தியுள்ளார்.
இதையடுத்து அவ்விடத்தில் இருந்து தப்பி ஓடிய டாக்டர் மதுராந்தகம் அருகே உள்ள அச்சரப்பாக்கம் பகுதி வழியாக சென்று கொண்டிருந்தபோது கார் தடுப்புச் சுவர் ஒன்றில் வேகமாக மோதியது. அதில் கோகுல் குமார் படுகாயம் அடைந்தார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த அச்சரம்பாக்கம் காவல்துறையினர் கோகுல்குமாரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து விசாரணை மேற்கொண்டதில் கோகுல் குமார் தனது மனைவியை கார் ஏற்றி கொன்று விட்டு தப்பி ஓடியதில் விபத்திற்குள்ளானது தெரியவந்தது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மதுராந்தகம் காவல்துறையினர் கீர்த்தனாவின் உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அதில் படுகாயமடைந்த முரஹரி மற்றும் குமாரி ஆகிய இருவரையும் சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை குறித்து மதுராந்தகம் காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.