கடனைத் திருப்பிக் கொடுக்க இயலாமல் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மண்டைக்காடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வந்தார். இவர் சமையல் தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கு முத்துலட்சுமி என்ற மனைவியும், 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். அவர் ஒரு வருடத்திற்கு முன் தக்கலை பகுதியில் உள்ள சுயஉதவிக்குழு ஒன்றில் ரூ.10 ஆயிரம் கடனாக பெற்றுள்ளார். பின் வாங்கிய கடனில் ஒரு பகுதியை மட்டுமே திருப்பி செலுத்தியுள்ளார். அதையடுத்து ஏற்ப்பட்ட கொரோனா காலகட்டத்தால் அவரால் கடனை திருப்பி செலுத்த இயலவில்லை. இந்நிலையில் சுய உதவிக்குழுவினர் கண்ணனின் வீட்டிற்குச் சென்று கடனை கேட்டுள்ளனர்.
அதற்கு அவர் என்னிடம் இப்போது பணம் இல்லை என்று கூறியுள்ளார். இதனால் கோபமடைந்த சுய உதவிக்குழுவினர் கடன் தொகையை திருப்பி செலுத்துமாறு கண்டித்து கூறியுள்ளனர். இதனால் மனவேதனையடைந்த கண்ணன் வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து கண்ணனின் மனைவி முத்துலெட்சுமி மண்டைக்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து மண்டைக்காடு போலீசார் கண்ணனின் தற்கொலை குறித்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.