இந்தியாவின் வளர்ச்சிக்கு கார்ப்பரேட் நிறுவனங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் 6வது நிதி ஆயோக் கூட்டம் காணொலிக் காட்சி மூலமாக நடந்து கொண்டிருக்கிறது. அதில் பேசிய பிரதமர் மோடி, “தனியார் கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்தியாவின் வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்பு வழங்குகின்றன. ஒருங்கிணைந்த செயல்பாடு ஒட்டுமொத்த நாட்டின் வளர்ச்சிக்கான அடிப்படை. இந்தியாவின் சுயசார்பு இந்தியா திட்டம் உலகிற்கே உதவியாக இருக்க போகிறது.
கூட்டாட்சி தத்துவம் என்பது மாநில அரசுடன் இணைந்து செயல்படுவது மட்டுமல்லாமல் மாவட்ட அளவிலும் இணைந்து செயல்படுவது. இளைஞர்கள் தான் இந்தியாவின் முதுகெலும்பாக இருக்கிறார்கள். கடந்த சில ஆண்டுகளாக நாட்டில் வங்கி கணக்கு தொடங்கும் தடுப்பூசி மற்றும் சுகாதார வசதிகளை பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதனைப் போலவே இலவச சமையல் எரிவாயு இணைப்பு மற்றும் இலவச மின் இணைப்பு பெற்ற ஏழை எளிய மக்களின் வாழ்வில் பெரும் மாற்றத்தையும் காண முடிகிறது” என்று அவர் தெரிவித்துள்ளார்.