அமெரிக்காவின் நாசா ஆராய்ச்சி மையம் அனுப்பிய விண்கலம் செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியதாக தெரிவித்துள்ளது.
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா “பெர்சவரன்ஸ்” என்ற ரோவர் விண்கலத்தை, செவ்வாய் கிரகத்தில் பழங்காலத்தில் உயிரினங்கள் வாழ்ந்ததா? என்பதை கண்டறிய அனுப்பியுள்ளது. கடந்த வருடம் ஜூலை மாதத்தில் செவ்வாய் கிரகத்திற்கு நாசா விஞ்ஞானிகள் விண்கலத்தை அனுப்பியுள்ளனர். இந்த விண்கலமானது செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பை ஆய்வு செய்து, அங்குள்ள மண் மற்றும் கற்களை பூமிக்கு திரும்ப எடுத்து வருவதற்காக அனுப்பப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் பெர்சவரன்ஸ் விண்கலமானது செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியுள்ளதாக நாசா அறிவித்துள்ளது. மேலும் இந்த விண்கலம் இரண்டு வருடங்கள் அங்கேயே சுற்றி பல ஆய்வுகளை நடத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஆய்வில் முக்கிய பங்காற்றிய நாசா விஞ்ஞானி டாக்டர் ஸ்வேதா மோகன் இந்தியாவில் பிறந்தவர் என்று தெரியவந்துள்ளது. மேலும் இத்திட்டமானது கடந்த 2013ஆம் வருடத்தில் தொடங்கப்பட்டுள்ளது. அப்போதிலிருந்தே சுவாதி இத்திட்டத்தில் பணியாற்றி வந்திருக்கிறார்.
ஜி.என் அண்ட் சி என்றழைக்கப்படும் வழிகாட்டுதல், இயக்குதல் மற்றும் கட்டுப்படுத்துதல் போன்ற பிரிவுகளின் தலைவராக ஸ்வேதா இருந்துள்ளார். மேலும் செவ்வாய் கிரகத்தில் ரோவர் வாகனம் எவ்வாறு செயல்பட வேண்டும் என்ற தொழில்நுட்பத்தையும் இவர் உருவாக்கியிருக்கிறார். சுவாதி கர்நாடக மாநிலம் பெங்களூரில் பிறந்துள்ளார். தன் ஒரு வயதில் அமெரிக்கா சென்ற அவர் பள்ளி படித்துக்கொண்டிருக்கும் போதே குழந்தைகள் நல மருத்துவராக வேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளார்.
ஆனால் “ஸ்டார் ட்ரெக்” டிவியின் நிகழ்ச்சியை பார்த்ததிலிருந்து புதிய உலகங்களை காணவேண்டும் என்ற ஆர்வம் அவருக்கு ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து விண்வெளி ஆய்வில் இளநிலை முதுநிலை பட்டப் படிப்புகளை பயின்று ஆராய்ச்சி படிப்பை முடித்து டாக்டர் பட்டமும் பெற்றிருக்கிறார். மேலும் நாசாவின் சனி கிரகத்திற்குரிய பயணம் மற்றும் நிலவின் பயண திட்டங்களிலும் இவர் ஈடுபட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.