புதுக்கோட்டையில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவிலில் யாசகம் பெற பிச்சைக்காரர்களிடம் கோவில் ஊழியர் லஞ்சம் பெற்றது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டையில் கீழ ராஜ வீதியில் சாந்தநாதர் சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் தை அமாவாசை தினத்தன்று பிச்சை எடுக்க வந்தவர்களிடம் கோவில் ஊழியர் இந்திராணி என்பவர் தலா 2,000 ரூபாய் லஞ்சம் பெற்றதாக கூறப்படுகிறது. மேலும் புரோகிதர்களிடமும் தலா ஆயிரத்து 600 ரூபாய் வாங்கியதாகவும் தெரிகிறது.
இதுகுறித்து பிச்சைக்காரர்கள் தகவல் கொடுத்ததை தொடர்ந்து அறநிலையத்துறை அதிகாரிகள் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். ஆனால் போலீசார் கோவில் ஊழியர் இந்திராணியிடம் மன்னிப்பு கடிதம் எழுதி வாங்கிக் கொண்டு அவரை அனுப்பி விட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானதால் விசாரணையை தீவிரப்படுத்தும்படி புதுக்கோட்டை நகர போலீசாருக்கு காவல் கண்காணிப்பாளர் திரு பாலாஜி சரவணன் உத்தரவிட்டுள்ளார்.