நாட்டின் வளர்ச்சிக்கு கார்ப்பரேட் நிறுவனங்களின் பங்களிப்பு மிகவும் அவசியம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
புது டெல்லியில் இன்று பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக்கின் ஆட்சிக்குழு கூட்டம் நடைபெற்றது. முக்கிய அமைச்சர்கள் நிதி ஆயோக் ஆட்சிக்குழு உறுப்பினர்கள், மாநில முதல்வர்கள் , ஆளுநர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமை செயலகத்தில் இருந்து காணொலி மூலமாக இந்த கூட்டத்தில் கலந்து கொண்டார். பிரதமர் மோடி பேசுகையில் நாட்டின் வளர்ச்சிக்கு கார்ப்பரேட் நிறுவனங்களின் பங்களிப்பு அவசியம் என்றும், நாட்டின் முன்னேற்றத்தில் தனியார் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் பெரும் பங்காற்றி வருகிறது எனவும் கூறினார்.
கூட்டாட்சி தத்துவம் என்பது மாநில அரசுடன் இணைந்து செயல்படுதல் மட்டுமல்ல. மாவட்ட அளவிலும் சேர்ந்து செயல்படுவது தான். ஒட்டுமொத்த நாட்டின் வளர்ச்சிக்காக அடிப்படை இந்தியாவின் தற்சார்பு திட்டம் உலகிலேயே முன்னோடியாக இருக்க போகிறது. கொரோனா காலத்தில் மத்திய மாநில அரசுகள் எவ்வாறு ஒன்றிணைந்து செயல்பட்டதோ அதேபோல தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் வளர்ச்சிக்கும் நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று அவர் கூறினார்.
இளைஞர்கள் தான் இந்தியாவின் முதுகெலும்பு கடந்த சில ஆண்டுகளாக நாட்டில் வங்கி கணக்கு தொடங்கும் தடுப்பூசி மற்றும் சுகாதார வசதிகளை பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதுபோல இலவச சமையல் எரிவாயு இணைப்பு மற்றும் இலவச மின் இணைப்பு பெற்ற ஏழை எளிய மக்களின் வாழ்வில் ஒரு மாற்றத்தையும் காண முடிகிறது என்று அவர் தெரிவித்தார்.