10 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பாக இன்று மாலை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகின்றது.
பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 % இட ஒதுக்கீட்டை அமுல்படுத்த வேண்டும் என்ற சட்ட மசோதாவை மத்திய அரசு நிறைவேற்றியது. ஆனால் தமிழகம் இந்த சட்ட மசோதாவை எதிர்த்து வந்தது. இதையடுத்து மத்திய அரசு தமிழகத்தில் 10 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்தினால் மருத்துவ கல்லூரிகளில் கூடுதலாக 25 சதவீத இடம் அளிக்கப்படும் என்று உறுதியும் அளித்துள்ளது. ஆனாலும் தமிழகத்தில் 10 % இட ஒதுக்கீடு அமுல்படுத்தபடாமல் கிடப்பில் இருந்து வருகின்றது.
இது குறித்து நடைபெற்று வரும் தமிழக சட்டபேரவை கூட்டத்தில் எதிர்கட்சி தலைவர் முக.ஸ்டாலினின் கோரிக்கையை ஏற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறுகையில் , தமிழகத்தில் 10 % இட ஒதுக்கீட்டை அமுல்படுத்துவது தொடார்பாக அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டப்படுமென்று தெரிவித்தார். இதையடுத்து இன்று மாலை 5.30 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற இருக்கிறது. இதில் பங்கேற்குமாறு திமுக , பாஜக , கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.