ஆளுநர் தமிழிசை வரவேற்பில் தொழிலாளர் ஒருவர் தனது குழந்தைகளோடு தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பதவியை பொறுப்பேற்ற தமிழிசை சௌந்தரராஜன் புதுச்சேரியில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு சென்று ஆய்வு செய்து வருகின்றார். இதனையடுத்து புதுச்சேரி மாநிலத்தின் காரைக்கால் மாவட்டத்திற்கு ஆய்வு செய்ய சென்றுள்ளார். இந்நிலையில் முதன்முறையாக ஆய்வுக்கு வரும் ஆளுநருக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காவல்துறை அணிவகுப்பு மரியாதை கொடுப்பது வழக்கம். இதையடுத்து அங்கு தமிழிசையை வரவேற்க காவல்துறையினர் தயாராக இருந்துள்ளனர்.
அப்போது காரைக்கால் நகராட்சி ஒப்பந்த நிறுவனத்தில் குப்பை அள்ளும் பணியில் ஈடுபடும் வாகன ஓட்டுனர் ஏசுராஜ் என்பவர் தன்னுடைய குழந்தைகளோடு வந்து உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றுள்ளார். இந்த தற்கொலை முயற்சியின் போது அங்கிருந்த காவல்துறையினர் அவர்களை தடுத்து காப்பாற்றி குழந்தைகளையும் மீட்டுள்ளனர். மேலும் அவர்களை அங்கிருந்து அகற்றியுள்ளனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.