திருக்கடையூர் கோவிலில் உலக மக்கள் கொரோனவிலிருந்து விடுபட புதுச்சேரி துணை ஆளுநர் சிறப்பு ஆராதனை நடத்தியது வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் உள்ள புகழ்பெற்ற அபிராமி அம்மன் உடனுறை அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் நேற்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் குடும்பத்துடன் வந்து தெய்வ வழிபாடு செய்தார். அப்போது மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத் ஆகியோர் துணைநிலை ஆளுநருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
அதைத் தொடர்ந்து தருமபுரம் ஆதீனம் கோயில் நிர்வாகம் சார்பாக ஆதினத்தின் மீனாட்சி சுந்தர தம்பிரான் தலைமையில் அளிக்கப்பட்ட பூரண கும்ப மரியாதை ஏற்றுக்கொண்ட புதுச்சேரி துணை ஆளுநர், கோயில் யானை பசுவிற்கு நெற்றியில் பொட்டு இட்டு மகிழ்ந்தார்
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்,” உலக மக்கள் அனைவரும் கொரோனா தொற்றிலிருந்து விடுபட வேண்டி தரிசனம் செய்தேன். தடுப்பூசி ஊக்கப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இருக்கிறது” என்றார். தொடர்ந்து செய்தியாளர்கள் கேட்ட நியமன எம்எல்ஏக்கள் ஓட்டுரிமை குறித்த கேள்விக்கு அவர் “சட்ட ரீதியாக அனைவரும் பார்த்துக் கொள்வார்கள்” என்று பதிலளித்தார். இந்த செய்தி வலைத்தளங்களில் வைரலாக பரவி பரவி வருகிறது.