பிளஸ் ஒன் பொதுத்தேர்வு ரத்து செய்வது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு மே 3ஆம் தேதி துவங்கும் என பள்ளி கல்வித்துறை ஏற்கனவே அறிவித்தது. அதேநேரம் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 வகுப்புக்கு பொதுத்தேர்வு தேதி அறிவிக்கப்படவில்லை. பிளஸ் 1 வகுப்புகளுக்கு மிகவும் தாமதமாக பள்ளிகள் திறக்கப்பட்டதால் மிகக் குறைந்த அளவே பாடங்கள் நடத்தப்பட்டு உள்ளது. எனவே தேர்வு நடத்தினால் மாணவர்களுக்கு கடுமையாக இருக்கும் என கருதப்படுகிறது.
இதனால் பிளஸ் 1 பொது தேர்வை ரத்து செய்து விட்டு நான்கு ஆண்டுகளுக்கு முன்பிருந்தது போல மாவட்ட அளவிலான தேர்வு நடத்தலாம் என பள்ளிக் கல்வி அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். இது தொடர்பாக ஈரோட்டில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில் பிளஸ் 1 பொதுத்தேர்வு ரத்து குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. ஆறு முதல் எட்டாம் வகுப்பில் உள்ள தனியார் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம், அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி மூலமும் கல்வி கற்பிக்கப்படும் நிலை தொடரும் என்று கூறினார். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து கல்வித்துறை ஆய்வுக்குப் பிறகு தமிழக முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்படும் என்று தெரிவித்தார்.