தமிழகத்தில் ஐந்து முதல் எட்டாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு தேர்வு நடைபெறுவது குறித்து அமைச்சர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதனையடுத்து 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால், பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டு பள்ளிகள் திறக்கப்பட்டன.
தற்போது தமிழகம் முழுவதிலும் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் பிளஸ் 2 மாணவர்களுக்கு பொதுத் தேர்வு மே 3ஆம் தேதி தொடங்கி 21ஆம் தேதி முடிவடையும் என பள்ளி கல்வித்துறை அறிவித்தது.
இதனையடுத்து ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், 5 முதல் 8ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு இந்த ஆண்டு தேர்வுகள் நடைபெறுவது குறித்து முதல்வர் அறிவிப்பார். ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதியவர்களுக்கு படிப்படியாக பணிகள் வழங்கப்பட்டு வருகிறது என்று கூறினார். மேலும் மக்கள் நலவாழ்வு துறை ஆலோசனை கூறிய பிறகே தேர்வு குறித்து முதல்வர் அறிவிப்பார் என்றும் கூறியுள்ளார்.