Categories
பல்சுவை

இதுதான் காரணமா…? எரியாத 5 வளையல்கள்… காந்தியின் உருக்கமான விளக்கம்… உறுதுணையாக நின்று உயிர்நீத்த கஸ்தூரிபாய்…!!

கஸ்தூரிபாயை சிதையூட்டிய பிறகும் அவர் அணிந்திருந்த 5 வளையல்கள் எரியாமல் இருந்ததற்கு காந்தி விளக்கம் அளித்துள்ளார்.

மகாத்மா காந்தியுடன் இணைந்து தென்னாப்பிரிக்காவில் கறுப்பர்களின் மீதான இனவெறிக்கு எதிரான போராட்டங்களில் தீவிரமாக ஈடுபட்டவர்களில் ஒருவர் அவருடைய துணைவியான கஸ்தூரிபாய் மோகன்தாசு கரம்சந்த் காந்தி. மேலும் காந்திஜி இந்திய வம்சாவளி தொழிலாளர்கள் மீதான கொடிய சட்டங்களை கண்டித்து நடத்திய அனைத்துப் போராட்டங்களிலும் கஸ்தூரிபாய் தனது முழு ஒத்துழைப்பையும் அளித்துள்ளார். அதோடு காந்திஜி சிறை சென்ற நேரங்களில் அறப் போராட்டங்களை கஸ்தூரிபாய் தலைமையேற்று நடத்தி உள்ளார்.

அதாவது 1942 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் காந்திஜி கைது செய்யப்பட்டபோது, பம்பாய் சிவாஜி பூங்காவில் நடைபெறவிருந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டதால் கஸ்தூரிபாய் அந்தப் பொதுக் கூட்டத்தில் பேசுவதற்கு தயாரானார். இந்த செய்தியை கேட்டு அனைவரும் ஆச்சரியப்பட்டார்கள். ஏனெனில் இதுவரை எந்த ஒரு பொதுக் கூட்டங்களிலும் கஸ்தூரிபாய் பேசியது இல்லை என்பதே இதற்கு காரணம். மேலும் அவர் கைது செய்யப்படும் அச்சமும் அனைவர் மனதிலும் இருந்தது. இந்நிலையில் அந்த பொதுக்கூட்டத்தில் சுமார் ஒன்றரை லட்சம் பேர் முன்னிலையில் கஸ்தூரிபாய் உரையை கேட்ட அனைவரும் உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கினர்.

அதன்பிறகு கைது செய்யப்பட்ட கஸ்தூரிபாய் காந்தி இருக்கும் பூனேவில் உள்ள ஆஹாகான் அரண்மனை சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அந்த சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இரண்டு மாதங்களுக்குள் அவரின் ஆரோக்கியம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. அவருக்கு மூச்சுக்குழாய் அலர்ஜியால் மூன்று முறை மாரடைப்பு ஏற்பட்டு படுத்த படுக்கையானார். அப்போது காந்திஜி தனது மனைவி படுத்திருக்கும் கட்டிலுக்கு அருகே சிறிய மேசையை உருவாக்கி உணவு உண்பதற்கு வசதி செய்து கொடுத்துள்ளார். அதோடு கஸ்தூரிபாயின் இறப்பிற்குப் பிறகு காந்தி எங்கு சென்றாலும் அந்த மர மேசையை தன்னுடன் கொண்டு செல்வது வழக்கம். இதனையடுத்து கஸ்தூரிபாயின் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டதால் பிரபல மருத்துவரான டாக்டர் தின்ஷாவை சிகிச்சை அளிக்க அனுப்புமாறு உள்துறை அமைச்சகத்திற்கு காந்தி கடிதம் எழுதியுள்ளார். அதோடு தனது பேத்தி கனு காந்தியையும் கஸ்தூரிபாயை கவனித்துக் கொள்ள அனுமதிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

அதன்பிறகு அங்கு அனுமதிக்கப்பட்ட கனு காந்தி உடல் நலிவுற்றிருந்த கஸ்தூரிபாயின் மனதிற்கு ஆறுதல் வழங்கும் வகையில் பக்தி பாடல்களை பாடியுள்ளார். மேலும் கஸ்தூரிபாய் தனது இறுதி நாட்களை எட்டும் சமயத்தில் மருத்துவர் வைதியராஜ் எப்போதும் சிறைக்கு வெளியே தனது காரில் அமர்ந்தபடியே தூங்கிக் கொண்டிருப்பார். ஏனெனில் கஸ்தூரிபாயின் உடல் நலம் எந்த சமயத்திலும் மோசமாகலாம் என்ற நிலைமையை அவர் முழுதும் அறிந்துள்ளார். அப்போது கஸ்தூரிபாயின் மகன் தேவதாஸ் காந்தி பென்சிலின் ஊசியை கல்கத்தாவிலிருந்து வரவழைத்த போது, காந்தி அதனை தனது மனைவிக்கு போடுவதற்கு அனுமதிக்கவில்லை.

இதனை அடுத்து 1944 ஆம் ஆண்டு பிப்ரவரி 22ஆம் தேதி மகன் தேவதாஸ் புனிதமாக கருதப்படும் கங்கை நீரை தனது தாய்க்கு இறுதியாக வழங்கினார். இதனைத் தொடர்ந்து மாலை தனது உயிரை துறந்த கஸ்தூரிபாயை சுசீலா நய்யார் மற்றும் மீரா பென்னின் உதவியோடு காந்தி குளிப்பாட்டிகாந்தியின் பிறந்த நாளன்று கஸ்தூரிபாய் அணிந்திருந்த அதே சிகப்பு நிற புடவையை அவருக்கு அணிவித்தார். அதன்பிறகு கஸ்தூரிபாயை சீதையூட்ட எந்த வகையான கட்டைகளை பயன்படுத்துவது என்று ஆலோசனை நடந்தபோது சந்தன கட்டைகளை வரவழைக்க காந்தியின் நலம் விரும்பிகள் கூறி உள்ளனர். ஆனால் அதனை காந்தி ஏற்றுக் கொள்ளவில்லை.அப்போது சிறை அதிகாரிகள் அவரிடம் 1943 ஆம் ஆண்டு பிப்ரவரியில் காந்தி 21 நாட்கள் உண்ணாவிரதம் இருந்த போது அவருக்காக வரவழைக்கப்பட்ட சந்தன கட்டைகள் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

அதன்பிறகு தன்னுடைய சிதைக்காக சேகரிக்கப்பட்ட கட்டைகளைக் கொண்டு தன்னுள் பாதியான தன் மனைவி கஸ்தூரிபாய் தகனம் செய்யப்பட வேண்டும் என அவர் விரும்பி அதனை ஏற்றுக் கொண்டார். அதன்பிறகு சிறை வளாகத்திலேயே பகவத் கீதை, குரான், பைபிள் போன்றவற்றில் இருந்து சில பகுதிகள் இறுதிச் சடங்கில் வாசிக்கப்பட்டதை தொடர்ந்து காந்தியின் மகன் தேவதாஸ் கஸ்தூரிபாயின் உடலுக்கு சிதையூட்ட,  காந்தி அங்கிருந்த ஒரு மரத்தின் கீழே அமர்ந்து அதனைப் பார்த்துக் கொண்டிருந்தார். அங்கிருந்த அனைவரும் காந்தியை அழைத்துச் செல்லுமாறு அறிவுறுத்தி உள்ளனர். ஆனால் அதனை ஏற்காத காந்தி அங்கேயே சில மணி நேரம் உட்கார்ந்திருந்தார்.

அனைத்தும் முடிந்த பிறகு கஸ்தூரிபாயின் மகன்கள் தாயின் அஸ்தியை சேகரித்த போது அவரின் உடல் முழுவதும் சாம்பல் ஆகியிருந்த நிலையில் அவர் அணிந்திருந்த 5 கண்ணாடி வளையல்கள் மட்டும் அப்படியே இருந்துள்ளது. இதனை பார்த்து ஆச்சரியம் அடைந்த அவர்கள் காந்தியிடம் இது குறித்து தெரிவித்த போது அவர் “கஸ்தூரிபாய் நம்மை விட்டு எங்கும் செல்லவில்லை, எப்போதும் நம்முடனே இருப்பார் என்பதை உணர்த்தி இருக்கிறார்” என்று காந்தி நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |