பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெற்றோரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மதுரை மாவட்டத்தில் உள்ள காமராஜர்புரம் பகுதியில் முத்துப்பாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவர் டிரைசைக்கிள் தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கு பொன்மதி என்ற ஒரு மகள் உள்ளார். அவர் காமராஜர்புரம் பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு பயின்று வந்துள்ளார். இந்நிலையில் சம்பவம் நடைபெற்ற அன்று மாணவி பள்ளிக்கு செல்வதற்காக வீட்டின் மேல் மாடிக்கு குளிக்க சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் மாணவி திரும்பி வராததால் அவரது தாயார் மாடிக்கு சென்று பார்த்துள்ளார்.
அங்கு கதவு பூட்டப்பட்ட நிலையில் இருந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த மாணவியின் தாய் பக்கத்து வீட்டில் உள்ள தனது உறவினர்களை அழைத்துள்ளார். பின் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பூட்டியிருந்த கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது பொன்மதி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார் என்பது தெரிந்தது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கீரைத்துறை போலீசார் மாணவியின் உடலை மீட்டு மதுரையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து கீரைத்துறை காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.