நைஸ் நகரத்திற்கு சுற்றுலாப்பயணிகள் வருவதை தவிர்க்க ஊரடங்கை கடுமையாக்க வேண்டுமென்று நகர மேயர் கூறியுள்ளார்.
பிரான்சில் அமைந்துள்ளது நைஸ் நகரம். இந்த நகரம் தான் கொரோனாவால் அதிக அளவு பாதிக்கப்பட்டவர்களின் விகிதத்தை கொண்டுள்ளது. நைஸில் 1,00,000ற்கு 740 என்ற விகிதத்தில் கொரோனா தொற்று பதிவாகி உள்ளது. இந்த விகிதமானது தேசிய சராசரியை விட மூன்று மடங்கு அதிகம். இதனிடையே நைஸ் நகரில் இந்த வார இறுதியில் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தீவிரமாக்குவது குறித்து அரசு முடிவு செய்யும் என சுகாதார அமைச்சர் கூறியுள்ளார்.
இந்நிலையில் ஊரடங்கை கடுமையாக்குவதற்கு நடவடிக்கைகள் தேவை நகர மேயர் Chiristian Estrosi கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, “வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்துவது பயனுள்ளதாக இருக்கும். மேலும் அது சுற்றுலா பயணிகளின் வருகையையும் தடுக்கும். நைஸ் நகரத்தில் வானிலை நன்றாக இருப்பதால் சுற்றுலா பயணிகள் இங்கு வர ஆசைப்படுகின்றனர்.
வார இறுதி நாட்களில் மட்டும் முழு ஊரடங்கை அமல்படுத்துவது நகரத்தின் பொருளாதார நடவடிக்கைகளுக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது. நாங்கள் கொரோனாவுக்கு எதிரான போரில் வெற்றி அடைந்தால் இந்த கோடை காலத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகளை எங்கள் நகரத்திற்கு வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி அடைவோம்” என்று அவர் கூறியுள்ளார்.