கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள நாதேகவுண்டன்புதூர் கிராமத்தில் சுமார் 100 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. இப்பகுதியில் கடந்த இரண்டு மாதங்களாக குடிநீர் சரியாக விநியோகித்த படாததால் அங்கு வசிக்கும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்தில் உள்ளனர். இது குறித்து ஊராட்சி மன்ற தலைவரிடம் பொதுமக்கள் பலமுறை புகார் அளித்துள்ளனர். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாத காரணத்தால் கோபமடைந்த பெண்கள் அப்பகுதியில் உள்ள சாலையில் காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட பெண்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது உடனடியாக நடவடிக்கை எடுத்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என்று அப்பகுதி பெண்கள் கூறும் போது, திடீரென மழை பெய்தது. ஆனால் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனை தொடர்ந்து உடனடியாக குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என ஊராட்சி மன்ற தலைவர் உறுதியளித்ததை அடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றுவிட்டனர். இவர்களின் போராட்டமானது சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக நீடித்ததால் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.