புதுச்சேரி சட்டப்பேரவையில் காங்கிரஸ் – திமுக கூட்டணி அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று நடைபெறுகின்றது.
புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் அரசு தனது மெஜாரிட்டியை இழந்து விட்டதாக எதிர்க்கட்சிகள் மனு அளித்ததை தொடர்ந்து துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று மாலை 5 மணிக்குள் சட்டப்பேரவையை கூட்டி ஆளும் காங்கிரஸ் அரசு தனது மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தார். இதனை தொடர்ந்து பெரும்பான்மை நிரூபிப்பது தொடர்பான சட்டப் பேரவையை கூட்டுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே இன்று காலை 10 மணிக்கு சட்டப்பேரவை கூட்டப்படும், இதில் பெரும்பான்மை நிரூபிப்பது தொடர்பான விவாத நிகழ்ச்சி நடைபெறும் என சபாநாயகர் சிவக்கொழுந்து ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்நிலையில் ஆளும் கட்சி சார்பில் 14 சட்டமன்ற உறுப்பினர்களும், எதிர்க் கட்சி தரப்பில் 14 சட்டமன்ற உறுப்பினர்களும் என சமபலத்துடன் இருந்தனர். நேற்றைய தினம் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் லட்சுமி நாராயணன் ராஜினாமா செய்தார். இதேபோல் கூட்டணியில் உள்ள திமுக சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் ராஜினாமா செய்தார்.
இதன் காரணமாக ஆளும் காங்கிரஸ் – திமுக கூட்டணி கட்சியின் பலம் 14 லிருந்து 12 குறைந்தது. மேலும் எதிர்க்கட்சித் தரப்பில் 14 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். ஆகவே தற்போதைய சூழலில் பார்க்கும்போது ஆளும் காங்கிரஸ் அரசு மெஜாரிட்டியை இழந்து விட்டது என்று கூறவேண்டும். இருந்தபோதிலும் இன்றைய தினம் சட்டப்பேரவையில் மெஜாரிட்டியை நிரூபிப்பது தொடர்பாக ஆளும் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் மற்றும் கூட்டணி கட்சியான திமுக சட்டமன்ற உறுப்பினர்களுடன் முதல் அமைச்சர் நாராயணசாமி நேற்று ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் ஷாஜகான், கந்தசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டம் முடிந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் நாராயணசாமி, புதுச்சேரியில் காங்கிரஸ் – திமுக எம்எல்ஏக்கள் உடன் ஆலோசனை நடத்திய பின், கூட்டணி கட்சிகளின் கருத்துக்களை கேட்டறிந்து எங்களின் நிலைப்பாட்டை தெரிவிப்போம். இன்று காலை ஆலோசித்த பின் இறுதி முடிவு எடுக்கப்படும் என நாராயணசாமி தெரிவித்தார். இப்படியான ஒரு பரபரப்பான சூழலில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகின்றது.