பப்ஜி கேம் மூலம் அறிமுகமான இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலத்தை சேர்ந்த 24 வயது இளம்பெண் ஒருவர் வங்கியில் உதவி மேலாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் எப்போதும் பணி முடிந்து வீட்டிற்கு வந்ததும் ஆன்லைனில் பப்ஜி கேம் விளையாடுவதை வழக்கமாக வைத்துள்ளார். இந்த ஆன்லைன் பப்ஜி விளையாட்டில் பலர் ஒன்று சேர்ந்து விளையாடும் போது, இந்த பெண்ணிற்கு கேரள மாநிலம் கொச்சி பகுதியில் வசித்து வரும் ஹரிஷ் என்ற வாலிபர் அறிமுகமாகியுள்ளார். இந்நிலையில் இரண்டு பேரும் தொடர்ந்து பப்ஜி கேம் விளையாடி வந்த போது அந்த வாலிபர் இளம்பெண்ணின் செல்போன் நம்பரை வாங்கி பல நாளாக பேசி வந்துள்ளார்.
இதனை அடுத்து அந்த இளம்பெண்ணை தொடர்புகொண்டு ஹரிஷ் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஒரு நண்பரை தான் பார்க்க செல்வதாகவும், தனக்கு துணையாக வந்தால் நன்றாக இருக்கும் எனவும் அந்த இளம்பெண்ணிடம் கூறியுள்ளார். அதற்கு முதலில் மறுப்பு தெரிவித்த இளம்பெண் அவர் தொடர்ந்து வற்புறுத்தியதால் கேரளாவில் இருந்து இரண்டு பேரும் பேருந்து மூலம் கோவை மாவட்டத்தில் உள்ள கோயம்புத்தூருக்கு சென்றுள்ளனர் அப்போது அங்கு உள்ள ஒரு விடுதியில் இரண்டு நாட்களாக அறை எடுத்து தங்கிய போது ஆசை வார்த்தைகள் கூறி ஹரிஷ் அந்த இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
அதன் பின்னர் கேரளாவிற்கு திரும்பி வந்ததும் அந்த இளம் பெண்ணுடன் பேசுவதை ஹரிஷ் நிறுத்தியதால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த பெண் கேரள மாநிலத்தில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் இந்த சம்பவம் நடந்த இடம் கோயம்புத்தூர் என்பதால் அங்கு சென்று புகார் அளிக்கும்படி போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். அதன்படி அந்த இளம்பெண் கோவை மத்திய அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் வங்கி அதிகாரியை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை வலைவீசி தேடி வருகின்றனர்.