முன்னால் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான முருகன் கடந்த 11 மாதங்களுக்கு பிறகு நளினியை நேரில் சந்தித்து பேசியுள்ளார்.
முன்னாள் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான முருகன் வேலூர் ஆண்கள் ஜெயிலிலும் நளினி வேலூர் பெண்கள் ஜெயிலிலும் அடைக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஜெயிலில் இருக்கும் கைதிகளை அவருடைய உறவினர்கள் சந்திக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் நளினி மற்றும் முருகன் நேரில் சந்தித்துப் பேசுவது ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து கடந்த ஜனவரி மாதம் முதல் கைதிகளை அவருடைய உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் சந்தித்து பேச அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதனால் வேலூர் ஆண்கள் ஜெயிலில் உள்ள முருகன் ஜெயில் சூப்பிரண்டு பிரியதர்ஷனிடம் நளினியை நேரில் சந்தித்து பேச வேண்டும் என்ற கோரிக்கை மனுவை அளித்துள்ளார். அந்த மனு பரிசீலிக்கப்பட்ட நிலையில் வேலூர் ஆண்கள் ஜெயிலில் இருந்த முருகனை வேலூர் பெண்கள் ஜெயிலுக்குப் பலத்த பாதுகாப்புடன் ஆயுதப்படை காவல்துறையினர் அழைத்துச் சென்று 9.35 மணி முதல் 10.05 மணி வரை இருவரும் ஒரு அறையில் கடந்த 11 மாதங்களுக்கு பிறகு நேரில் சந்தித்து பேசியுள்ளனர். அதன்பின் ஆயுதப்படை காவல்துறையினர் முருகனை வேலூர் ஆண்கள் ஜெயிலிலுக்கு அழைத்து வந்து சிறையில் அடைத்துள்ளனர்.