ஒரு டன் ரேஷன் அரிசியை கடத்த முயன்றவர்களை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமாரின் உத்தரவின் பெயரில் மாவட்டத்தில் உள்ள அனைத்து இடங்களிலும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் முத்தையாபுரம் மெயின் ரோடு பகுதியில் தூத்துக்குடி முத்தையாபுரம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, அவ்வழியாக வந்த ஒரு காரை வழிமறித்து சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் 20 மூட்டைகளில் மொத்தம் ஒரு டன் ரேஷன் அரிசியை அந்த காரில் கடத்தி சென்றதை போலீசார் கண்டுபிடித்தனர்.
இதனையடுத்து 1 டன் ரேஷன் அரிசியையும், அதனை கடத்த பயன்படுத்தப்பட்ட காரையும் போலீசார் பறிமுதல் செய்து விட்டனர். அதன் பின் அந்த ரேஷன் அரிசியை நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் ஒப்படைத்து விட்டனர். மேலும் ரேஷன் அரிசியை கடத்தி சென்ற குற்றத்திற்காக தூத்துக்குடி சவேரியார் புரத்தில் வசித்து வரும் ராஜா என்பவரையும், கந்தசாமி புரத்தில் வசித்து வரும் கணேசன் என்பவரையும் போலீசார் கைது செய்து உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்து விட்டனர்.