மதுக்கடையின் பூட்டை உடைத்து 96 மதுபாட்டில்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து விட்டு சென்றுள்ளனர்
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொதட்டூர்பேட்டை அருகே இருக்கும் கீழபூடி என்ற இடத்தில் தமிழக அரசுக்கு சொந்தமான இரண்டு மது கடைகள் இயங்கி வருகின்றன. இந்த கடையின் மேற்பார்வையாளர் கிருஷ்ணமூர்த்தி, விற்பனையாளர்கள் நரசிம்மன் மற்றும் ஆறுமுகம் போன்றோர் இரவு கடையை பூட்டி விட்டு சென்றுள்ளனர். இந்நிலையில் மறுநாள் காலை கடைக்கு வந்து பார்த்த போது, இரு கடைகளிலும் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதனையடுத்து உள்ளே சென்று பார்த்த போது 96 மதுபாட்டில்கள் திருடப்பட்டிருப்பதை அவர்கள் கண்டுபிடித்தனர். ஆனால் அந்த கடையில் வைக்கப்பட்டிருந்த 3 லட்சத்து 30 ஆயிரம் பணம் கொள்ளையர்களின் கண்ணில் படாமல் தப்பிவிட்டது. மேலும் மற்றொரு கடையில் இருந்த 3 லட்சத்து 60 பணமும் அப்படியே இருந்துள்ளது. அதாவது கொள்ளையர்கள் கடையில் இருந்த மது பாட்டில்களை மட்டும் திருடி விட்டு சென்றுள்ளனர். இதுகுறித்து பொதட்டூர்பேட்டை காவல் நிலையத்துக்கு கிருஷ்ணமூர்த்தி புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.