கேரளாவில் பள்ளி மாணவியை மார்பில் கத்தியால் குத்தி கொன்று தப்பிச் சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள பள்ளிவாசல் பகுதியில் வசித்து வருபவர் ராஜேஷ் என்பவர். இவருக்கு 17 வயதில் ரேஷ்மா என்ற மகள் இருந்தார்.ரேஷ்மா இடுக்கி சண் வாலி மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் பள்ளிக்கு சென்ற ரேஷ்மா நெடுநேரமாகியும் வீட்டிற்கு வராததால் பதற்றமடைந்த பெற்றோர்கள் இடிக்கி வெள்ளதூவல் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
ரேஷ்மாவின் உறவினர்கள் மற்றும் காவல்துறையினர் சேர்ந்து ரேஷ்மாவை தீவிரமாக தேடினர். அப்போது ரேஷ்மா வீட்டின் அருகே உள்ள பள்ளிவாசல் பகுதியில் உள்ள ஒரு முட்புதரில் நெஞ்சில் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார்.மகள் ரத்தவெள்ளத்தில் இறந்து கிடப்பதை கண்ட பெற்றோர்கள் அதிர்ச்சியில் மூழ்கினர்.
ரேஷ்மா இறந்து கிடந்த இடத்தில் சோதனையிட்டபோது அங்கு ஒரு மொபைல் போன் கிடைத்துள்ளது. அது யாருடையது என்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அது ரேஷ்மாவின் உறவினர் அனு என்பவர் உடையது என்று தெரியவந்தது. அதன்பிறகு ரேஷ்மா நடந்து சென்ற சாலையில் இருந்த சிசிடிவி போலீசார் ஆய்வு செய்தனர்.
அப்போது ரேஷ்மா உடன் அனு நடந்து செல்லும் காட்சி பதிவாகியுள்ளது.அதன்பிறகு போலீசார் அனுவைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் தற்போது வரை அவர் எங்குள்ளார் என்ற தகவல் கிடைக்கவில்லை. ஆகையால் தப்பிச் சென்ற அனு தமிழகத்திற்கு சென்றிருக்கலாம் என போலீஸார் கூறுகின்றனர்.