ஸ்விட்ஸர்லாந்து அஸ்ட்ராஜெனெகாவுடன் கொரோனா தடுப்பூசிக்காக போடப்பட்ட ஒப்பந்தத்திலிருந்து விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன .
பிரிட்டன் – ஸ்வீடிஷ் மருந்து நிறுவனமான அஸ்ட்ராஜெனெகாவுடன் கொரோனா தடுப்பூசிக்காக போடப்பட்ட ஒப்பந்தத்திலிருந்து ஸ்விட்ஸர்லாந்து விலக உள்ளதாக அந்நாட்டின் ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. அஸ்ட்ராஜெனெகாவுடன் சுவிட்சர்லாந்து கடந்த அக்டோபரில் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. அதில் 5.3 மில்லியன் தடுப்பூசிகளை பெறவுள்ளதாக ஒப்பந்தம் செய்துள்ளது.
ஸ்விட்ஸர்லாண்ந்து அதிகாரிகள் தற்போது இந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதற்கு விரும்பவில்லை. ஆனால் நாட்டில் தடுப்பூசி அங்கீகரிக்கப்படவில்லை என்றால் அத்தகைய முடிவு எடுக்க வாய்ப்புள்ளதாக ஸ்விஸ் பொது சுகாதாரத்திற்கான மத்திய அலுவலகத்தை மேற்கோள்காட்டி ஸ்விஸ் NZZ am SONNTAG செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது. ஸ்விட்ஸர்லாந்து அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசிகளை வேறு ஒரு நாட்டிற்கு வழங்க உள்ளதாகவும், அது குறித்து திட்டமிட்டு வருவதாகவும் சொல்லப்படுகின்றது.
அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியின் செயல்திறன், பாதுகாப்பு மற்றும் தரம் குறித்த கூடுதல் தரவை ஆய்வுக்கு ஸ்விட்ஸர்லாந்து கேட்டிருந்தது. ஜனவரி மாத இறுதியில் அனைத்து வயதினருக்கும் அஸ்ட்ராஜெனெகா மற்றும் ஆக்ஸ்போர்ட் தடுப்பூசியை செலுத்த ஐரோப்பிய ஒன்றியத்தின் கட்டுப்பாட்டாளார்கள் அங்கீகரித்தனர். இருப்பினும் 55 வயதிற்கு மேற்பட்டவர்களில் அதன் செயல் திறன் குறித்த தரவு இல்லாததால் 55 அல்லது 65 வயதிற்குட்பட்டவர்கள் மட்டுமே தடுப்பூசியை பயன்படுத்த பல ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் பரிந்துரைத்துள்ளது .