கொரோனா காலங்களில் நாட்டின் ஒற்றுமையை பிரதிபலிக்க பிரதமர் மோடி வீட்டில் தீபம் ஏற்ற சொன்னதை போல முதல்வரும் ஒரு முடிவு எடுத்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதங்களே உள்ள நிலையில் தேர்தல் பிரச்சாரங்கள் சூடு பிடிக்கின்றன. ஆளும் கட்சி அதிமுக, எதிர்கட்சியான திமுக அடுத்தடுத்து பல்வேறு முடிவுகளையும், நடவடிக்கைகளையும் மேற்கொண்டு தேர்தல் பிரச்சார வியூகங்களை வகுத்து வருகின்றன. மறைந்த முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா இல்லாத நிலையில் நடைபெறும் தேர்தல் என்பதால் ஆளுமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் மு க ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி உள்ளனர்.
இந்த நிலையில்தான் எதிர்க்கட்சியான திமுக தேர்தலுக்காக பல்வேறு திட்டங்களையும், ஆளுங்கட்சியான அதிமுகவும் பல்வேறு உத்தரவுகளையும் பிறப்பித்து வருகின்றது. மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் என வாக்குகளைக் கவரும் வகையில் பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகின்றனர். சசிகலா சிறையில் இருந்து வெளிவந்த நிலையில் அதிமுகவும் இதே பார்மட்டை செய்து வருகிறது. இந்தநிலையில் எடப்பாடி பழனிச்சாமி சென்டிமெண்ட் டச் செய்து அனைத்து வாக்குகளையும் பெற்று விட வேண்டும் என்று பிரதமர் மோடி கையாண்ட உத்தியை எடுத்துள்ளார்.
இந்தியா கொரோனாவால் அல்லல் பட்டுக் கொண்டிருக்கும் போது பிரதமர் நரேந்திர மோடி, நாட்டின் ஒற்றுமையை வெளிப்படுத்த அனைவரும் மின்சார விளக்குகளை அணைத்து விட்டு, விளக்கை ஏற்றுங்கள் என்று தெரிவித்ததை போல வருகின்ற 24 ஆம் தேதி மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளில் அனைவரும் மாலை 6 மணிக்கு தீபம் ஏற்றுங்கள் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தேர்தல் பிரசாரம் நடைபெற்று வரும் இந்த காலத்தில் தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் 6 மணிக்கு விளக்கு ஏற்றப்படுவது, அதிமுக என்ற ஒரு கட்சியையும், அம்மாவையும் ஒவ்வொரு வீடுகளிலும் கொண்டு சேர்க்க முடியும் என நினைத்து அதிமுக தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தேர்தலில் 3ஆவது முறையாக தொடர்ந்து ஆட்சியை பிடிக்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிமுக தேர்தல் பிரசாரத்தில் பல வியூகங்களை வகுத்து வருவது குறிப்பிடத்தக்கது.