இந்திய வரலாற்றிலேயே முதன்முறையாக ஒரே நாளில் சுங்கச்சாவடி கட்டணம் ரூ102 கோடியை தாண்டியுள்ளது.
இந்திய தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் வரிசையில் காத்துக் கிடப்பது பெரும் பிரச்சினையாக இருந்து வந்தது. சுங்கச்சாவடி கட்டணம் செலுத்துவதில் தாமதம், சிலரை வழங்குவதில் சிக்கல் போன்ற பிரச்சினைகளினால் வாகனங்கள் நீண்ட நேரம் காத்து கிடக்க வேண்டிய பிரச்சினைகள் தீரும் வகையில் பாஸ் டேக் கட்டண முறை அமலுக்கு வந்தது. இதன்மூலம் சுங்க கட்டணத்தை டிஜிட்டல் முறையில் செலுத்தலாம். சுங்க சாவடிகள் நெரிசல் குறையும் என்பதால் இந்த முறை கொண்டு வரப்பட்டது. இதை அடுத்து பாஸ் டேக் முறையை மத்திய அரசு கட்டாயமாக்கியது.
அதற்கான கால அவகாசத்தை மூன்று முறை நீடித்தது. இந்நிலையில் பிப்ரவரி 19ம் தேதியில் இருந்து ஒரே நாளில் சுங்கச்சாவடி கட்டணம் வசூல் 102 கோடியை தாண்டியுள்ளது. இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய வரலாற்றிலேயே ஒரு நாளில் இந்த அளவுக்கு அதிக கட்டணம் வசூல் ஆவது இதுவே முதல் முறை ஆகும். பாஸ் டேக் கட்டாயமாக்குவதற்கு முன்பு ஒரே நாளில் கிடைத்த கட்டண வசூல் 85 கோடி மட்டுமே. இந்த நடைமுறை வந்த பிறகு இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் சுங்க சாவடிகளில் கட்டணம் மோசடி குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.