சுவிற்சர்லாந்தில் விமானிகள் பணியின் போது முகக்கவசம் அணிய தடை விதிக்கப்பட்டிருப்பது விமானிகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுவிட்சர்லாந்தின் விமான சேவை நிறுவனத்தில் விமானிகள் பணியின்போது முகக்கவசம் அணிய தடை விதிக்கப்பட்டிருக்கிறது. அதாவது கொரோனா தீவிரத்தை குறைக்க 1.5 மீட்டர் இடைவெளியை பின்பற்றவேண்டும் என்று சுகாதார அமைப்பு அறிவித்தது. இந்நிலையில் விமானத்தில் விமானிகள் அறையில் இந்த கட்டுப்பாடு சாத்தியம் இல்லாதது என்று கூறப்பட்டது. இதனால் விமானிகளுக்கு தொற்று ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டு வந்தது.
இந்நிலையில் தற்போது விமான சேவை நிறுவனம் விமானிகள் பயணிக்கும் சமயத்திலும் முகக்கவசம் அணிய தடை விதித்துள்ளது. இது விமானிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஜெர்மனியைச் சேர்ந்த சுவிஸ் விமானி ஒருவர் சமீபத்தில் பிரேசில் நாட்டிற்கு சென்று வந்தபோது அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இது மட்டுமல்லாமல் அவருடன் பணிபுரிந்த இரண்டு விமானிகளும் முகக்கவசம் அணியவில்லை.
இதுகுறித்து விமானிகள் கூறியுள்ளதாவது, பணி மேற்கொள்ளும் சமயத்தில் முகக்கவசம் அணிவதால் எந்த பிரச்சினையும் ஏற்படாது. முகக்கவசம் அணிவதற்கு விமான சேவை நிறுவனம் தடை விதித்திருப்பது அவர்களின் அலட்சியத்தையேக் காட்டுகிறது என்று குற்றம் சாட்டுகின்றனர். எனினும் விமானிகள் முகக்கவசம் அணியும் போது தவிர்க்க முடியாத சூழ்நிலையில் மதிப்புமிக்க வினாடிகளை இழந்து விடக்கூடாது என்பதற்காகத்தான் இந்த தடை விதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உதாரணமாக விமானம் பறந்து கொண்டிருக்கும் சமயத்தில் திடீரென்று அழுத்தம் குறைந்தால் விமானிகள் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக சில நொடிகளுக்கு ஆக்சிஜன் முகக்கவசம் அணிய வேண்டிய சூழ்நிலை ஏற்படும். அந்த சமயத்தில் கொரோனாவிற்காக முகக்கவசம் அணிந்திருந்தால் முக்கியமான நேரத்தை அவர்கள் இழப்பர் என்று குறிப்பிட்டுள்ளனர். மேலும் விமானிகள் சைகை மொழியில் பேச வேண்டிய நிலை ஏற்படும். அதாவது விமானிகள் எப்போதும் நுகர்வுத் திறனுடன் இருப்பது அவசியம் இதனாலேயே முகக்கவசம் அணிய தடை விதிக்கப்பட்டு இருப்பதாக கூறியுள்ளனர்