தமிழக இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்வதற்கு முன்பு பெட்ரோல் டீசல் விலை உயர்வு குறித்து பேச அனுமதி மறுக்கப்பட்டதால் திமுக வெளிநடப்பு செய்தது. மேலும் பெட்ரோல் – டீசல் விலை மீதான வரியை தமிழக அரசு குறைக்க வேண்டும் எனவும் திமுக வலியுறுத்ய நிலையில் காங்கிரஸ், முஸ்லிம் லீக் உறுப்பினர்களும் சட்டப்பேரவையை புறக்கணித்து வெளியேற்றினர்.
அவைக்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் பேசிய போது, வருகின்ற வழியில் துணை முதலமைச்சரின் பேச்சு பாதியிலே கேட்டோம். அப்படியே அசந்து போய் விட்டோம். திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியில் இருந்து இறங்கிய போது ஒரு லட்சம் கோடி கடன் தான் இருந்தது. இன்றைக்கு எடுத்த எடுப்பிலேயே கொஞ்சம் கூட வெட்கம், சூடு, சொரணை இல்லாமல் நிதியமைச்சர் எங்கள் ஆட்சியில் 5.70 லட்சம் கோடி லட்சம் கடன் என்று சொல்கிறார் என்றால், இதைவிட ஆட்சி செய்வதற்கு அருகதையற்ற ஆட்சி என்பதற்கு சான்று இல்லை.
தமிழகத்தின் நிர்வாகத்தையும், நிதி நிர்வாகத்தையும் நிர்மூலமாக்கிய ஆட்சிதான் அதிமுக ஆட்சி. தமிழ்நாட்டின் கடன் தொகை 5.70 கோடியாக உள்ளது. அரசு கடன் வாங்கி மக்களுக்கு நன்மை செய்யவில்லை. சென்டர்களை விட்டு பினாமிகள் பங்கிட்டுக் கொடுத்து இருக்கிறார்கள். வாழ்வாதாரத்தை இழந்து வாடிய மக்களுக்கு நேரடியாக பண உதவி செய்யாமல் தேர்தல் நேரத்தில் சுயநலத்துக்காக பணம் கொடுப்பது இந்த அரசு விளம்பர மோகத்தால் கோடிக்கணக்கான பணத்தை செலவு செய்து கொண்டிருக்கிறார் என துரைமுருகன் கடுமையாக சாடினார்.