மனைவியை உயிரோடு எரித்துக் கொன்று, கணவர் குடும்பத்தோடு தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள இரும்புலி காலனியில் பார்த்திபன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பழைய இரும்பு கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். இவருக்கு ஜீவா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு பவித்ரா என்ற மகள் இருக்கிறார். இவர் உத்தரமேரூரில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்துள்ளார். மேலும் ஜீவா எப்போதும் செல்போனில் பேசிக் கொண்டிருப்பதால், பார்த்திபனுக்கு அவர் மீது சந்தேகம் வந்து அவரை கண்டித்ததால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு வந்த போது, தனது மனைவியை உயிரோடு எரித்துக் கொல்ல பார்த்திபன் திட்டமிட்டார். அதன்படி வீட்டில் இருந்த மண்ணெண்ணையை அதிகாலையில் தூங்கிக் கொண்டிருந்த ஜீவா மீது ஊற்றி தீவைத்து விட்டார். இதனையடுத்து அவரின் அலறல் சத்தம் கேட்டு எழுந்த பவித்ரா அதனை தடுக்க முயற்சித்த போது, பார்த்திபன் அவரின் மீது மண்ணெண்ணெய்யை ஊற்றி தீ வைத்து விட்டு, தனது உடல் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டுள்ளார்.
இவர்களின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் விரைந்து சென்று பார்த்தபோது, ஒரு குடும்பமே தீயில் எரிவதை கண்டு அதிர்ச்சி அடைந்து அச்சரப்பாக்கம் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்து விட்டனர். இதற்கிடையே சம்பவ இடத்திலேயே ஜீவா உடல் கருகி உயிரிழந்துவிட்டார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பார்த்திபனையும், அவரது மகள் பவித்ராவையும் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அதோடு உயிரிழந்த ஜீவாவின் உடலையும் மீட்டு அதே மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைத்துள்ளார்கள். மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த அச்சரப்பாக்கம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.