குடும்ப பிரச்சினையால் ராணுவ வீரர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள பொய்கை மோட்டூர் பகுதியில் ஸ்ரீதர் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு வசந்தகுமார் என்ற மகன் இருந்தார். வசந்தகுமார் லடாக் பகுதியில் ராணுவ வீரராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் அவர் சென்ற மாதம் விடுமுறை காரணமாக சொந்த ஊருக்கு வந்துள்ளார். இதையடுத்து சில நாட்களாக அவரது குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு மற்றும் வாக்குவாதம் காரணமாக அவர் யாரிடமும் பேசாமல் மன வேதனையில் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் சென்ற ஞாயிற்றுக்கிழமை அன்று வசந்தகுமார் வீட்டில் யாரும் இல்லாத சூழ்நிலையில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அதனை கண்ட அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டதையடுத்து ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அவர் மேல் சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் வசந்தகுமார் இறந்துவிட்டார். இந்த தற்கொலை குறித்து விரிஞ்சிபுரம் காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.