வானில் பறந்து கொண்டிருக்கும் போது விமானத்தில் தீ பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
யுனைட்டட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பயணிகள் விமானமானது அமெரிக்காவின் டென்வர் நகரில் இருந்து ஹோனாலுழு நகருக்கு புறப்பட்டு சென்றுள்ளது. இந்த விமானத்தில் 10 விமான ஊழியர்கள் மற்றும் 231 பயணிகள் பயணம் செய்துள்ளனர். இந்த விமானமானது தரையில் இருந்து 15 ஆயிரம் அடி உயரத்தில் புறப்பட்டுச் சென்ற சிறிது நேரத்திலேயே பறந்துகொண்டிருந்த விமானத்தில் ஒரு என்ஜினில் திடீரென தீ பிடித்ததால் விமானம் உடனடியாக டென்வெர் விமான நிலையத்துக்கு திருப்பி விடப்பட்டுள்ளது. இதனையடுத்து டென்வெர் விமான நிலையத்தில் தரையிறங்க அனுமதி கோரி நிலைமையை அவர்களிடம் விளக்கிய பின் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அந்த விமான நிலையத்தில் மீட்பு குழுவினரும் தயார் நிலையில் இருந்தனர்.
இந்நிலையில் விமானம் தரையிறங்குவதற்கு வானில் பறந்து கொண்டிருக்கும் போதே என்ஜினில் பற்றிய தீயானது வேகமாக பரவி விமானத்தின் பாகங்கள் எரிந்து தரையில் விழுந்து விட்டன. இதனால் விமானம் டென்வர் வரை போய் சேருமா என்று விமானத்தில் பயணித்த பயணிகள் மிகுந்த அச்சத்தில் இருந்தனர். ஆனால் பதற்றப்படாமல் பைலட் சாதூர்யமாக செயல்பட்டு டென்வெர் விமான நிலையத்தில் அந்த விமானத்தை அவசரமாக தரையிறக்கி விட்டார். இதையடுத்து என்ஜினில் பற்றிய தீயானது வேகமாக அணைக்கப்பட்டதால் மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டு அதில் பயணித்த ஊழியர்கள் மற்றும் பயணிகளின் உயிர் காப்பாற்றப்பட்டது. இந்நிலையில் விமானம் தீப்பிடித்த போது எடுக்கப்பட்ட வீடியோ மற்றும் உடைந்த பாகங்கள் குடியிருப்பு பகுதியில் விழுந்து கிடக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகின. மேலும் இந்த விபத்திற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.