பிரதமர் மோடி கல்குவாரி வெடி விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது இரங்கலை தெரிவித்திருக்கிறார்.
கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹிரன்காவல்லியில் அமைந்துள்ள கல்குவாரியில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். அதோடு படுகாயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் சட்டவிரோதமாக அங்கு பதுக்கி வைத்திருந்த ஜெலட்டின் குச்சிகள் போன்ற வெடி பொருட்கள் வெடித்து சிதறியதால் தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகின.
இதுகுறித்து கனிம வளத்துறை அமைச்சர் முருகேஷ் இராணி கூறும்போது, இந்த வெடி விபத்து குறித்து விசாரணை நடத்திய பின்பு சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். மேலும் வெடிவிபத்து ஏற்பட்ட இடத்தை கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை நேரில் சென்று பார்வையிட்டார். இது குறித்து பிரதமர் மோடி கூறும்போது, இந்த கல்குவாரி வெடி விபத்தில் உயிரிழந்த 6 பேரின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவிப்பதாகவும், இதில் காயமடைந்தவர் விரைவில் குணமடைய வேண்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.