கொரோனா பரவல் காரணமாக ராஜஸ்தான் மாநிலத்தில் 11 மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் அச்சுறுத்தி வந்த கொரோனா வைரசை தடுப்பதற்காக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் ஜெய்ப்பூர், ஜோத்பூர், கோடா, அஜ்மீர், அல்பர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. இதனையடுத்து அம்மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் பிப்ரவரி 22ஆம் தேதி முதல் மார்ச் 21 ஆம் தேதி வரை சில கட்டுப்பாடுகளுடன் கூடிய 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இதனடிப்படையில் பொது இடங்களில் நான்கு பேருக்கு மேல் கூட கூடாது, கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும், தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும், மேலும் திருமண நிகழ்ச்சிகளில் 200 பேருக்கு மேல் கலந்து கொள்ளக் கூடாது, அதே சமயம் துக்க நிகழ்ச்சிகளில் 20 பேருக்கு மேல் கலந்து கொள்ள கூடாது என்று கூறியுள்ளார். அதுமட்டுமின்றி கல்வித்துறை, போக்குவரத்துதுறை, தொழில்துறை, அரசு அலுவலகங்கள் ஆகியவற்றிக்கு 144 தடை உத்தரவில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக ராஜஸ்தான் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.