கடந்த 3 ஆண்டில் மட்டும் 51 குழந்தைகள் பெற்றோர்களால் வளர்க்க முடியாமல் மாவட்ட குழந்தைகள் நல குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
மதுரை மாவட்ட குழந்தைகள் நலகுழு பெற்றோர்களால் வளர்க்க முடியாத குழந்தைகளை தங்களிடம் ஒப்படைத்து விடலாம் என்ற அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக அவர்கள் போலீசாருடன் இணைந்து பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். ஆனால் என்ன விப்புணர்வு கொடுத்தாலும் மதுரை பகுதியில் ஆங்காங்கே பெண்சிசுக்கொலை இன்னமும் அரங்கேறி வருவது வருத்தமளிக்கிறது.
இதுகுறித்து குழந்தைகள் நல குழு உறுப்பினர் பாண்டியராஜா கூறும்போது “கடந்த 2018 ஆம் ஆண்டு 7 பெண் குழந்தைகளும் 2019ஆம் ஆண்டு 6 ஆண் குழந்தைகளும் 11 பெண் குழந்தைகளும் மாவட்ட குழந்தைகள் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். அதேபோல் 2020ஆம் ஆண்டு மேல்குறிப்பிட்ட இரண்டு ஆண்டைவிட பெற்றோர்களால் வளர்க்க முடியாத 27 குழந்தைகளை மாவட்ட குழந்தைகள் நல குழுவிடம் ஒப்படைத்துள்ளனர்.
இந்த குழந்தைகள் பல்வேறு இடங்களில் உள்ள காப்பகங்களில் பாதுகாப்பாக வளர்க்கப்பட்டு வருகின்றனர். மேலும் குழந்தைகளை பாதுகாப்பதற்காகவே சைல்டு லைன், குழந்தைகள் பாதுகாப்பு அலகு, குழந்தைகள் நலக்குழு போன்ற அமைப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் பெற்றோர்கள் தங்களால் வளர்க்க முடியாத குழந்தைகளை குழந்தைகள் நல குழுவிடம் ஒப்படைத்து விடுங்கள்” என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.