மூன்று அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் குடியேறும் போராட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினர்கள். அதில் மாற்றுத்திறனாளிகளுக்கு தனியார் துறையில் ஐந்து விழுக்காடு வேலை வாய்ப்பு இடங்களை நிரப்ப வேண்டும் எனவும், தமிழ்நாடு அரசின் அனைத்து துறைகளில் உள்ள பின்னடைவு காலிப் பணியிடங்களை மாற்றுத்திறனாளிகளை கொண்டுநிரப்ப வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.
மூன்றாம் அம்ச கோரிக்கையாக மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித் தொகையை அதிகரித்து 3000 ரூபாயும் மிகவும் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு 5000 ரூபாயும் வழங்க வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர். இந்த மூன்று அம்சங்களை நிறைவேற்றும் வகையில் தமிழக அரசு உடனடியாக வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். 200க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டு அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். அதோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.