மத்திய அரசின் உதவித்தொகை பெறுவதற்கான தேர்வை 3012 மாணவ மாணவிகள் எழுதியுள்ளனர்.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகளுக்கு மத்திய அரசின் உதவித்தொகை பெறுவதற்கான தேர்வு நேற்று முன்தினம் பெரம்பலூர் மாவட்டத்தில் 11 மையங்களிலும் அரியலூர் மாவட்டத்தில் 15 மையங்களிலும் நடைபெற்றுள்ளது. இந்தத் தேர்வு இரண்டு பிரிவுகளாக நடத்தப்பட்டுள்ளது. அதாவது காலை 9.30 மணி முதல் 11 மணி வரை மனத்திறன் தேர்வும் அதன்பின் 11.30 மணி முதல் 1 மணி வரை படிப்பறிவு திறன் தேர்வும் நடத்தப்பட்டுள்ளது.
இதில் பெரம்பலூர் மாவட்டத்தில் 420 மாணவர்களும் 732 மாணவிகளும் பங்கேற்றுள்ளனர். அதேபோல் அரியலூர் மாவட்டத்தில் 606 மாணவர்களும் 1154 மாணவிகளும் பங்கேற்றுள்ளனர். இந்த தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் மாணவ மாணவிகளுக்கு ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலும் மாதந்தோறும் ரூபாய் ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும். இந்த தொகையை மாணவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என கல்வி அதிகாரி தெரிவித்துள்ளார்.