போலியான பல்பொடி நிறுவனத்தை சேர்ந்தவர்களை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
மதுரை மாவட்டத்தில் கோபால் பல்பொடி நிறுவனம் செயல்பட்டு வருகின்றது. இங்கு தயாரிக்கப்படும் பல்பொடியானது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு இங்கிருந்து விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருவள்ளூர் சாலையில் இருக்கும் ஒரு கடைக்கு இரண்டு பேர் காரில் வந்து தாங்கள் கோபால் பல்பொடி விற்பனையாளர்கள் என்று கூறியுள்ளனர். அதன்பிறகு அதனை வாங்கிய வியாபாரி கொடுத்த பணத்தை பெற்றுக் கொண்டு இருவரும் காரில் சென்று விட்டனர். இதனை அடுத்து மதுரையிலிருந்து கோபால் பல்பொடி நிறுவன விற்பனையாளர்கள் அந்த கடைக்கு வந்த போது, கடைக்காரர் இரண்டு பேர் இப்போதுதான் கோபால் பல்பொடி என்று கூறி அதனை கொடுத்து விட்டு சென்றதை கூறியுள்ளார். இதனை கேட்டதும் தாங்கள் தான் ஒரிஜினல் கோபால் பல்பொடி நிறுவனத்தினர் என்று அவர்கள் நிரூபித்து விட்டனர்.
இதனைத்தொடர்ந்து போலி நிறுவனத்தை சேர்ந்தவர்கள் மற்றொரு கடையில் காரில் நிற்பதை பார்த்த கோபால் பல்பொடி நிறுவனத்தினர் இரண்டு பேரையும் பிடித்து பரமத்திவேலூர் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்து விட்டனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் இருவரும் சேலம் மாவட்டத்தில் வசிப்பவர்கள் என்று தெரியவந்துள்ளது. அதோடு அவர்கள் போலியாக பல் பொடி தயார் செய்து அதனை கோபால் பல்பொடி என்ற பெயரில் விற்பனை செய்ததும் போலீசார் கண்டுபிடித்தனர். அதன்பின் 30 ஆயிரம் மதிப்புள்ள 15 பாக்கெட்டுகளில் இருந்த பல்பொடி பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்து விட்டனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.