சாமியார் பாபா ராம்தேவின் கோரோனில் ( coronil) மருந்தை மக்களுக்கு செலுத்த அனுமதி கொடுத்தது யார் ? என்று இந்திய மருத்துவர்கள் கூட்டமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது.
கொரோனா பரவல் உச்சத்தில் இருந்தபோது சாமியார் ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் கோரோனில் என்ற ஆயுர்வேத மருந்தை அறிமுகம் செய்தது. எதிர்ப்புகள் வலுத்ததையடுத்து ஆயுஸ் அமைச்சகம் சாமியார் ராம்தேவ்வின் கோரோனில் மருந்திற்கு ஒப்புதல் கொடுப்பதை நிறுத்தியது. இந்த நிலையில் சாமியார் ராம்தேவ் மீண்டும் கொரோனாவை 100% குணப்படுத்தும் என கூறி கோரோனில் மருந்தை அறிமுகம் செய்துள்ளார். அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படாத மருந்தின் அறிமுக விழாவில் மத்திய அமைச்சர் ஹர்ஸ்வர்த்தன், நிதின் கட்கரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதற்கு இந்திய மருத்துவர்கள் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அக் கூட்டமைப்பின் தலைவர் டாக்டர் செயலால் ஒரு நாட்டின் சுகாதார அமைச்சர் அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்படாத ஒரு மருந்தை எப்படி தவறாக பரிந்துரைக்கலாம் ? எனவும், இட்டுக்கட்டப்பட்ட ஒரு மருந்தை இந்திய மக்கள் மீது திணிப்பதா ? எனவும் கேள்வி எழுப்பின. ஒரு பொருள் நேர்மையானதா ? நல்லதா ? என்று அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படாத போது அதை பயன்படுத்த அனுமதி அளிப்பது அறம் தானா ? ஒரு ஏகபோக கார்ப்பரேட் நிறுவனத்தின் தரம் நிரூபிக்கப்படாத மருந்தை மார்க்கெட் லாபம் என்ற பெயரில் விற்பனை செய்யலாமா ? என்றும் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.