இந்திய திரை உலகின் சூப்பர் ஸ்டார் என்று போற்றப்பட்டவர் ஸ்ரீதேவி. விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள மீனம்பட்டியை பூர்வீகமாக கொண்டவர் ஸ்ரீதேவி. இவரது தந்தை ஐயப்பன் ஒரு வழக்கறிஞர். பெரியப்பா ஜனதா கட்சி காலத்தில் எம்எல்ஏவாக இருந்தவர். ஐயப்பன் ராஜேஸ்வரி தம்பதிக்கு 1963ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13-ம் தேதி பிறந்த ஸ்ரீதேவி ஸ்ரீ அம்மா என்ற பெயருடன் வளர்ந்து நான்காவது வயதிலேயே துணைவன் என்ற திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அந்த திரைப்படத்தில் முருகர் வேடத்தில் நடித்தார். மேலும் நம் நாடு, பெண் தெய்வம் உள்ளிட்ட திரைப்படங்களிளும் குழந்தை நட்சத்திரமாக நடித்து ரசிகர்களின் வரவேற்பை பெற்றார்.
1971ஆம் ஆண்டு அவர் பூம்பாட்டாய் என்ற மலையாளத் திரைப்படத்தில் நடித்தார். இது அவருக்கு கேரள மாநில அரசின் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருதை பெற்றுத்தந்தது. 1975ஆம் ஆண்டு ஜூலி திரைப்படத்தின் மூலம் ஹிந்தி திரையுலகில் நுழைந்தார். தனது 13வது வயதில் கதாநாயகியானார். கே.பாலச்சந்தர் இயக்கத்தில் உருவான மூன்று முடிச்சு திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த், கமலஹாசன் ஆகியோருடன் இணைந்து நடித்தார். இருப்பினும் 16 வயதினிலே படத்தில் மயிலாக நடித்த ஸ்ரீதேவி புகழின் உச்சிக்கு சென்றார். வறுமையின் நிறம் சிவப்பு, வாழ்வே மாயம், குரு உள்ளிட்ட 27 திரைப்படங்களில் கமலஹாசனுடன் இணைந்து நடித்தார். அப்போது கமல் ஸ்ரீதேவி ஜோடி தான் பொருத்தமான ஜோடியாகவும் வெற்றி ஜோடியாகவும் திகழ்ந்தது.
பிரியா, தர்மயுத்தம், அடுத்த வாரிசு, ராணுவவீரன் என ரஜினிகாந்த் உடனும் 22 படங்களில் கதாநாயகியாக வலம் வந்தார். தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பிற மொழி படங்களிலும் ஜொலித்த ஸ்ரீதேவி ஹிந்தி திரையுலகில் புகழ்ந்து அமிதாப்பச்சன், அனில் கபூர் உள்ளிட்ட நடிகர்களுடன் நடித்து புகழ் பெற்றார். ஏறத்தாழ பத்தாண்டுகளுக்கு கால்ஷீட்டே இல்லை என்ற அளவிற்கு மிகவும் பிஸியான நடிகையாக இருந்தார் ஸ்ரீதேவி. அனில் கபூரின் சகோதரரான தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து கொண்டு அமைதியான குடும்ப வாழ்வில் ஈடுபட்டு வந்த ஸ்ரீதேவி 15 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு 2012ஆம் ஆண்டு மீண்டும் நடிக்க வந்தார். அவர் நடித்த இங்கிலீஷ் விங்கிலீஷ் ஹிந்தி திரைப்படம் ரசிகர்கள் மனதை மீண்டும் கவர்ந்தது. இதனை அடுத்து விஜய் நடித்த புலி திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார்.
மேலும் அவர் நடித்த மாம் திரைப்படமே கடைசி திரைப்படமாகும். அதேபோல் ஷாருக்கானின் ஹீரோ படத்தில் கௌரவ தோற்றத்தில் ஸ்ரீதேவி நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் 181 திரைப்படங்களிலும் இந்தி மொழியில் 72 படங்களிலும் நடித்திருக்கிறார். சிறந்த நடிப்பிற்காக 5 முறை பிலிம்பேர் விருது பெற்ற ஸ்ரீதேவிக்கு கடந்த 2013-ஆம் ஆண்டு மத்திய அரசு பத்மஸ்ரீ விருதை வழங்கி கௌரவித்தது. இதேபோன்று தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநில அரசுகளின் விருதுகளையும் ஸ்ரீதேவி பெற்று சாதனை புரிந்துள்ளார். இந்த நிலையில் பிப்ரவரி 24 ஆம் தேதி துபாயில் உள்ள ஹோட்டலில் தங்கியிருக்கும் போது திடீரென அவர் காலமானார். 54 வயதிலேயே அவர் உயிரிழந்தது நாடு முழுவதும் உள்ள அனைத்து வயது ரசிகர்களையும் மீளா துயரத்தில் ஆழ்த்தியிருக்கிறது.