கூலித்தொழிலாளி அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பேரிகை பிராமண தெருவில் யாகூப் என்று கூலித்தொழிலாளி வசித்து வந்துள்ளார். இவர் பேரிகை ரிங் ரோடு அருகே கடந்த 21ஆம் தேதி மர்மமான முறையில் இறந்து கிடந்ததை அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று அவரின் உடலை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில் யாகூப்பின் உறவினர்கள் அவரது இறப்பு குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வந்துள்ளனர்.
இதனையடுத்து யாகூப் இறந்த அன்று காமராஜர் நகரில் வசித்து வரும் நரசிம்மன் என்பவரும் அவருடன் இருந்துள்ளதை போலீசார் கண்டுபிடித்தனர். அதன்பின் நரசிம்மனை பிடித்து போலீசார் நடத்திய விசாரணையில் மது அருந்திய போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் யாகூப்பை நரசிம்மன் தாக்கியதும், இதனால் கீழே விழுந்த யாகூப் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததும் தெரியவந்துள்ளது. அதன்பின் நரசிம்மனை பேரிகை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.