திருச்சியில் குப்பைத்தொட்டியில் சாக்குப் பையில் பச்சிளம் குழந்தையை சுருட்டி தூக்கி வீசி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி விமான நிலையம் அருகே காவேரி நகர் தொகுதி ஒன்று உள்ளது. அப்பகுதியில் காலி மனைகள் இருந்தது. அம்மனைகளுக்கு அருகே நேற்று காலை அப்பகுதி மக்கள் நடந்து சென்றனர். அப்பொழுது அங்குள்ள ஒரு குப்பை தொட்டியில் சாக்குப்பை ஒன்றில் ஒரு பச்சிளங் குழந்தையின் அழுகைசத்தம் கேட்டது. அதனை அறிந்த பொதுமக்கள் அனைவரும் அங்கு சென்று பார்த்தனர் . பின்னர் மக்கள் அனைவரும் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.
அதன் பிறகு உடனடியாக திருச்சியில் உள்ள விமான நிலைய நுண்ணறிவுப் பிரிவு போலீசார் ஜெயக்குமாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு உடனடியாக வந்து சேர்ந்தனர். அதன்பிறகு அந்த சாக்குப் பையில் இருந்த பச்சிளம் குழந்தையை உடனடியாக எடுத்து பார்த்தார். அதில் குழந்தை பிறந்து சில மணி நேரமே ஆகிறது என்றும் இக்குழந்தை பெண் குழந்தை என்றும் கூறினர்.
அக்குழந்தையை கைப்பற்றிய போலீசார் உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று முதலுதவி சிகிச்சை அளித்தார்.அதன் பிறகு திருச்சி அரசு மருத்துவமனையில் அக்குழந்தையை மேல் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டது.அப்பொழுது குழந்தைக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் குழந்தை குறைபிரசவத்தில் பிறந்தது என்று கூறினர்.
இச்சம்பவம் குறித்து அந்தப் பச்சிளம் குழந்தையை சாக்குப்பையில் போட்டு வீசி சென்ற கல் நெஞ்சம் கொண்ட தாய் யாரென்று போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.அதன் பிறகு குழந்தை குறைபிரசவத்தில் பிறந்ததால் வீசப்பட்டதா? இல்லை வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என விசாரணை நடத்துகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.