போலீசாரின் நடவடிக்கையை கண்டித்து பெண் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர் கூட்டத்தில் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அரட்டை பாளையம் கிராமத்தில் லட்சுமி என்பவர் வசித்து வருகிறார். இவர் கிரைண்டர் பழுது நீக்கும் தொழில் நடத்தி வாழ்ந்து வந்துள்ளார். கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு அதே பகுதியில் வசிக்கும் பச்சையப்பன் என்பவர் லட்சுமிக்கு சொந்தமான புறம்போக்கு நிலத்தை தன்னுடையது என்று கூறி அவரை தாக்கியுள்ளார். இந்த விவகாரம் குறித்து மேல்மருவத்தூர் காவல் நிலையத்தில் லட்சுமி புகார் கொடுத்தார். ஆனால் மருத்துவமனையிலிருந்து மருத்துவ சான்றிதழை பெற்று வந்தால் மட்டுமே புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் அவரை அனுப்பி விட்டனர்.
இந்நிலையில் மருத்துவமனைக்கு லட்சுமி சென்றபோது, லட்சுமியிடம் அங்கிருந்த பெண் போலீஸ் ஒருவர் 300 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். இதனால் கோபமடைந்த லட்சுமி செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்குள் சென்று உள்ளார். இதனையடுத்து அங்கு நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெயை திடீரென உடலில் ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அனைவரும் ஓடி வந்து லட்சுமி மீது தண்ணீரை ஊற்றி அவரைக் காப்பாற்றிவிட்டனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த செங்கல்பட்டு டவுன் போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.