பஞ்சாயத்து தலைவர் மற்றும் துணைத் தலைவருக்கு இடையே நடந்த சண்டை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள புஞ்சை பாலதொழுவு ஊராட்சி நிர்வாகத்தில் தங்கமணி என்பவர் தலைவராகவும், சத்யபிரியா என்பவர் துணைத் தலைவராகவும் பதவி வகித்து வருகின்றனர். இதில் சத்யாவின் கணவர் சுப்பிரமணி என்பவர் குடிநீர் வழங்குவதில் குளறுபடி செய்வதால் ஊருக்கு சரியாக குடிநீர் விநியோகிக்கபடவில்லை என்ற புகாரின் அடிப்படையில் பெண்கள் மற்றும் பொதுமக்களுடன் தலைவர் தங்கமணி துணைத்தலைவர் சத்யாவின் வீட்டிற்கு நேரில் சென்றுள்ளார். மேலும் இதுகுறித்து கேட்டபோது இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னிமலை காவல் நிலையத்தில் தலைவர் தங்கமணி புகார் அளித்தார்.
அந்தப் புகாரின் அடிப்படையில் போலீசார் துணை தலைவர் சத்திய பிரியா மற்றும் அவரது கணவர் சுப்ரமணி போன்ற இருவர் மீதும் காயப்படுத்துதல், முறையற்று நடந்து கொள்ளுதல், ஆபாசமாக பேசுதல் மற்றும் கொலை மிரட்டல் போன்ற நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்தனர். இதனை தொடர்ந்து சத்யபிரியா தலைவர் தங்கமணி, அவரின் நண்பர் சசிகுமார், சசிகுமாரின் மனைவி கவிதா ஆகிய 3 பேர் மீதும் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் முறையற்று நடந்து கொள்ளுதல், கொலை மிரட்டல் மற்றும் ஆபாசமாக பேசுதல் போன்ற மூன்று பிரிவின் கீழ் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விட்டது. இதனைத் தொடர்ந்து இவர்களின் சண்டை குறித்து ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி மாவட்ட கலெக்டருக்கு அறிக்கை அனுப்பி வைக்க உள்ளனர்.