சென்னை விமான நிலையத்திற்கு கனடாவில் இருந்து 2 1/2 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பாக்கெட்டுகள் கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்தில் உள்ள விமான நிலைய சுங்க இலாகா கமிஷ்னர் தலைமையில் சுங்க இலாகா அதிகாரிகள் சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய சரக்கு பிரிவு தபால் நிலையத்திற்கு கனடா நாட்டிலிருந்து வந்த மூன்று பார்சல்களை சோதனை செய்துள்ளனர். அந்த மூன்று பார்சல்களில் சென்னையிலுள்ள முகவரிகளுக்கு அனுப்புவதற்காக மூலிகை பொருட்கள் இருப்பதாக எழுதப்பட்டுள்ளது. இந்நிலையில் அதிகாரிகள் அந்த பார்சலை பிரித்து பார்த்த போது அதில் மூன்று பாக்கெட்டுகளில் தலா 100 கிராம் என 300 கிராம் காய்ந்த இலைகள் இருந்துள்ளது.
இவற்றை பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி சோதனை செய்தபோது, இந்த இலைகள் உயர்ரக கஞ்சா என்பது அதிகாரிகளுக்கு தெரியவந்துள்ளது. இதனால் சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள அந்த 300 கிராம் கஞ்சாவை அதிகாரிகள் பறிமுதல் செய்து அந்தப் பார்சல்களில் இருந்த முகவரிகளை பற்றி விசாரித்த போது அவை போலியானவை என்பது தெரிய வந்துள்ளது. மேலும் சுங்க இலாகா அதிகாரிகள் இந்த கஞ்சாவை சென்னைக்கு அனுப்பியது யார் என்றும், யாரெல்லாம் இந்த கடத்தலில் சம்பந்தப்பட்டவர்கள் என்பது குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.