சென்னையில் 5 நிமிடத்திற்கு ஒருமுறை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன் முக்கிய பகுதியாக போக்குவரத்து சேவை மீண்டும் இயக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் குறைந்த அளவிலான பேருந்துகள் மற்றும் ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் ஊதிய உயர்வு மற்றும் பணி ஓய்வு பணப்பயன் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசு பேருந்து ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் தொடங்கியது. அதன்படி சென்னை, திருச்சி, மதுரை, கோவை, நெல்லை மற்றும் தஞ்சை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பேருந்துகள் எதுவும் ஓடவில்லை. அதனால் அத்தியாவசிய தேவைகளுக்காக பயணிப்போர் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் சென்னையில் 5 நிமிடத்திற்கு ஒருமுறை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. பேருந்து ஸ்டிரைக்கை கருத்தில் கொண்டு காலை 7 மணிமுதல் 11 மணி மற்றும் மாலை 4 மணி முதல் 8 மணி ஆகிய நேரங்களில் 5 நிமிடத்திற்கு ஒருமுறை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்றும் தேவைக்கு ஏற்ப ரயில்களில் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.