புதுச்சேரி மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்த நிலையில் குடியரசு தலைவர் ஆட்சி அமலுக்கு வந்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்னும் சில வாரங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கு மத்தியில் புதுச்சேரியில் எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்து வருவதால் காங்கிரஸின் பலம் குறைந்து கொண்டே வருகிறது. அதுமட்டுமன்றி சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலையில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அமைச்சரவை பதவி விலகியது. துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை நேரில் சந்தித்து நாராயணசாமி தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.
இந்நிலையில் புதுச்சேரியில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த உள்துறை அமைச்சகத்துக்கு ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பரிந்துரை செய்தார். அதன்படி புதுவையில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார். மத்திய அமைச்சரவையின் பரிந்துரை குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
புதுச்சேரி மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியில் கவிழ்ந்த நிலையில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வந்துள்ளது. மத்திய அமைச்சரவையில் பரிந்துரையை ஏற்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். சட்டப்பேரவையில் காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழந்ததால் கடந்த 2ஆம் தேதி நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவை ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.