மகனை காப்பாற்ற சென்ற தாயும் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சென்னமாலம் கிராமத்தில் மாதேகவுடு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரத்தினம் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு மாதேஷ் என்ற மனநிலை பாதித்த மகன் இருக்கின்றான். இந்நிலையில் தனது மகன் மாதேஷுடன் ரத்தினம் ஆடு மாடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு சென்றுள்ளார். அந்த சமயம் தண்ணீர் தாகம் எடுப்பதாக கூறி மாதேஷ் அங்குள்ள தனியார் விவசாயத்துக்கு சென்று தண்ணீர் எடுத்துள்ளான். இதனை அடுத்து திடீரென நிலைதடுமாறி கிணற்றுக்குள் தவறி விழுந்துவிட்டார். அவரின் அலறல் சத்தம் கேட்டு ரத்தினம் ஓடி வந்து பார்த்தபோது, மகன் கிணற்றுக்குள் நீச்சல் தெரியாமல் மூழ்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதனால் மகனை காப்பாற்றுவதற்காக கிணற்றில் குதித்த ரத்தினத்திற்கும் நீச்சல் தெரியாததால் தாய்,மகன் இருவரும் தண்ணீரில் மூழ்கி விட்டனர். இவர்களது அலறல் சத்தம் கேட்டதால் அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து காப்பாற்ற முயற்சி செய்தும், அவர்களால் முடியவில்லை. அதற்குள் தாய் மகன் இருவரும் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துவிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இருவரின் உடல்களையும் மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.